பதம்
எழுத்து, தனித்தோ அல்லது தொடர்ந்தோ வந்து பொருள் தருமானால் அது ‘பதம்‘ எனப்படும். இதனை, சொல், மொழி, கிளவி என்றும் கூறலாம்.
- ஆ, ஈ, கை, நீ, தீ, வா, போ, மா, தை, பூ, பை – இவை போன்ற எழுத்துகள் தனித்தனியே பொருளை உணர்த்துகின்றன.
- அம்மா, மலர், படி, ஈகை போன்ற சொற்களில் பல எழுத்துகள் சேர்ந்து ஒரு பொருளை அல்லது கருத்தை உணர்த்துகின்றன.
ஓரெழுத்து ஒருமொழி
ஓர்எழுத்து மட்டும் தனித்து நின்று பொருள் தருமானால் அது ஓர்எழுத்து ஒருமொழி என்று அழைக்கப்படுகின்றது.
(எ.கா)
ஆ -> பசு ; ஈ -> பறக்கும்
கை -> உறுப்பு ; வீ -> மலர்
பதம் – பகுபதம், பகாப்பதம் என இரு வகைப்படும்.
பகாப்பதம்
மரம், கழனி, உண், எழுது ஆகிய சொற்களைக் மேலும் சிறிய உறுப்புகளாகப் பிரிக்க முடியாதல்லவா? இவ்வாறு பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும். இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக(Root Word) இருக்கும்.
பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு.
(எ.கா) பெயர்ப் பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று.
வினைப் பகாப்பதம் – நட, வா, படி, வாழ்.
இடைப் பகாப்பதம் – மன், கொல், தில், போல்.
உரிப் பகாப்பதம் – உறு, தவ, நனி, கழி.
பகுபதம்
சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதம் என்பர். அவ்வாறு பிரிக்கப்படும் உறுப்புக்கள் பகுபத உறுப்புக்கள் ஆகும்.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறு பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு அமையும் பெயர்களும், வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும் வினைச்சொற்களும் பகுபதங்கள் ஆகும். இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பகுபதங்கள் ஆக மாட்டா.
பகுபதத்தின் வகைகள்
முதல் நிலையில் பகுபதத்தை இருவகையாகப் பிரிக்கலாம். அவை,
பெயர்ப் பகுபதம் (பெயர்ச்சொல்லாக அமையும் பகுபதம்)
பெயர்ப் பகுபதத்தை மேலும் ஆறு வகையாகப் பிரிக்கலாம்.
அவை,
- பொருட்பெயர்ப் பகுபதம் -> – பொன்னன் (பொன் + அன்)
- இடப் பெயர்ப் பகுபதம் -> நாடன் (நாடு + அன்)
- காலப் பெயர்ப் பகுபதம் -> ஆதிரையாள்- ஆதிரை நாளில் (நட்சத்திரத்தில்) பிறந்தவள் என்று காலப் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதம் ஆகும்.
- சினைப் பெயர்ப் பகுபதம் -> கண்ணன் (கண் + அன்) (கண் என்னும் உறுப்பை குறிக்கிறது)
- குணப் பெயர்ப் பகுபதம் -> இனியன் (இனிமை + அன்)
- தொழில் பெயர்ப் பகுபதம் -> உழவன் (உழவு + அன்)
வினைப் பகுபதம்
பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.
(எ.கா) உண்கின்றான் – உண் + கின்று + ஆன்
பகுபத உறுப்புகள்
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியவையாகும்.
பகுதி
பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும். இது கட்டளையாகவே அமையும். இதனை முதனிலை என்றும் வழங்கலாம். ஒரு பகுபதத்தின் முதலில் உள்ள உறுப்பு பகுதி. அதை மேலும் பிரிக்க முடியாது. ஆகவே ‘பகுதி‘யைப் ‘பகாப்பதம்‘ எனக் குறிப்பிடுவர்.
உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும்.
பகுதியாக அமையும் பகாப்பதங்கள் இரண்டு வகைப்படும்.
- பண்புப் பகுதியாக அமையும் பண்புப்பகாப்பதம்
- தெரிநிலை வினைப் பகுதியாக அமையும் வினைப் பகாப்பதம்
பண்புப் பகுதிகள்
செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை எனவரும் பண்புப் பொருளமைந்த மேலும் பகுக்கப்படாத பகுதிச் சொற்களாகும்.
மேலே கண்ட பண்புப் பெயர்ப் பகுதிகள் பிற சொற்களோடு சேர்ந்து (புணர்ந்து) வரும்போது சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த மாற்றங்கள் ஏழு வகைகளில் நிகழ்கின்றன என்பர். ஒரு பண்புப்பெயர்ப் பகுபதம் பிற சொல்லோடு புணரும் போது இந்த ஏழுவகை மாற்றங்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவையோ ஒரே சொல்லில் வந்து அமையலாம். அம் மாற்றங்கள் பின்வருவன:
(1) ஈறுபோதல் -சிறுவன் – சிறுமை + அன்.
நல்லன் – நன்மை+அன் இவற்றில் ஈற்றில் உள்ள ‘மை‘ விகுதி கெட்டது
(2) இடை ‘உ‘கரம் ‘இ‘ ஆதல்
பெரியன் – பெருமை + அன் இவற்றில் ‘மை‘ கெட்டது மட்டுமன்றிப் பெருமை இடையில் உள்ள உகரம், இகரமாக ஆகியுள்ளது.
(3) ஆதி நீடல்
பசுமை + இலை = பாசிலை. பசுமை + இலை.
பசுமை என்பதில் உள்ள முதல் எழுத்தான பகரம் நீண்டு ‘பா‘ ஆகியுள்ளது. ‘சு‘ என்பதில் உள்ள உகரம் ‘சி‘ என இகரமாயிற்று. ‘மை‘ விகுதிகெட்டது. எனவே பாசிலை என்றாயிற்று.
(4) அடி அகரம் ‘ஐ‘ ஆதல்
பைங்கண் என்பது பசுமை + கண் – பைங்கண்.
பசுமை என்பதில் உள்ள அடி (முதல்) எழுத்தான ப(ப்+அ) இல் உள்ள அகரம் பை (ப்+ஐ) என ஆகியுள்ளது. ‘மை‘ கெட்டுள்ளது. ‘சு‘ என்பதும் கெட்டுள்ளது.
(5) தன் ஒற்று இரட்டல்
வெறுமை + இலை என்பது வெற்றிலை என்றாகிறது. இதில் று (ற்+உ) இல் உள்ள ஒற்றான ‘ற்‘ இரட்டித்துள்ளது. ‘மை‘கெட்டுள்ளது.
(6) முன்நின்ற மெய்திரிதல்
செம்மை + ஆம்பல் – சேதாம்பல் என்றாயிற்று. இதில் ‘மை‘ விகுதி கெட்டது. முதல் எழுத்தான(ஆதி நீண்டது) செ – சே என நீண்டது. ‘செம்‘ முன்னின்ற ‘ம்‘ ‘த்‘ என்னும் மெய்யாகத் திரிந்துள்ளது.
(7) இனம் மிகல்
பசுமை + தலை என்பது பசுந்தலை என்றாகும். இதில் ஈற்றில் உள்ள ‘மை‘ கெட்டது. ‘தலை‘ என்னும் சொல்லில் உள்ள ‘த்‘ என்னும் மெய்க்கு இனமான ‘ந்‘ என்னும் நகரமெய் மிகுந்துள்ளது(தோன்றியுள்ளது).
இந்த மாற்றங்களை எல்லாம் பின்வரும் நன்னூல் நூற்பா தொகுத்துக் கூறுதல் காணலாம்.
வினைப் பகுதிகள்
தெரிநிலை வினைப் பகுதிகள் செய் என்னும் ஏவல் பகாப்பதங்களாக அமையும்.
(எ.கா) : நட, வா ,சீ ,விடு , உண் ,பார் ,செல்
மேலே கண்ட பகுதிகள் விகுதிகளுடன் புணரும் போது சில பகுதிகள் இயல்பாக வரும். சில விகாரப்பட்டு வரும்.
- இயல்பாக வருதல் நட+ஆன்-நடந்தான் , பார்+ஆன்-பார்த்தான்
- விகாரம் அடைந்து வருதல்
தா + ஆன் – தந்தான். இதில் ‘தா‘ – தகரமாகக் குறுகியுள்ளது
சா + ஆன் – செத்தான் – இதில் ச்+ஆ (சா) என்பது (ச்+எ) செ ஆகத் திரிந்துள்ளது.
விகுதி
பகுபதத்தின் இறுதியில் அமைந்து பால், எண், திணை, இடம், காலம் காட்டும் உறுப்பு விகுதி ஆகும்.
(எ.கா): உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும். இது ஆண்பால் உயர்திணையைக் குறிக்கிறது காட்டுகிறது.
இடைநிலை
பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.
உண்+ட்+ஆன் என்னும் பகுபதத்தில் –
உண் : முதனிலை
ட் : இடைநிலை
ஆன் : இறுதிநிலை.
இடைநிலை இருவகைப்படும்.
பெயரிடைநிலை :
(எ.கா) அறிஞன் – ஞகர இடைநிலை
தந்தை – தகர இடைநிலை
வினையிடை நிலை :
த் , ட் ,ற் , இன் – இறந்த கால இடைநிலை
ப் ,வ் – எதிர்கால இடைநிலை
கிறு ,கின்று , ஆநின்று – நிகழ்கால இடைநிலை
சந்தி
பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.
- நட – பகுதி
- த் – சந்தி
- தல் – விகுதி
சாரியை
பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும். சார்ந்தும் ,இயைந்தும் வருவது சாரியை . சாரியை இருவகைப்படும். 1. எழுத்துச்சாரியை 2. புணர்மொழிச்சாரியை
வந்தனன் என்னும் சொல் ‘வா+த்+த்+அன்+அன்‘ என்று பிரிந்து நிற்கும். இதில்,
- வா -பகுதி
- த் -சந்தி
- த் -இடைநிலை
- அன் -சாரியை
- அன்-விகுதி,
- ‘த்’ இடைநிலைக்கும், ‘அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம்.
அடுப்பு +அம் +கரை = அடுப்பங்கரை ( அம் புணர்மொழிச் சாரியை)
விகாரம்
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும். ஒரு சொல் எதிர்வரும் சொல்லோடு புணரும்போது வரும் விகாரம் தோன்றல் , திரிதல் , கெடுதல் என மூவகைப்படும்.
(எ.கா.)
வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் + அன் + அன்
வா – பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
த் – சந்தி. இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.
Related Tags
#திணை, #புணர்ச்சி, #யாப்பு