1.1 உயிர்மெய்க் குறில்
மெய்யெழுத்துகளோடு உயிர்க்குறில்கள் இணைந்து உருவாகும் எழுத்துகள், உயிர்மெய்க் குறில் என்றழைக்கப்படுகின்றது. மொத்தம் (18 மெய் x 5 உயிர் குறில்கள் ) 90 உயிர்மெய்க்குறில் எழுத்துகள் உள்ளன.
உதாரணம்
- க் + அ = க
- க் + இ = கி
- க் + உ = கு
1.2 உயிர்மெய் நெடில்
மெய்யெழுத்துகளோடு உயிர்நெடில்கள் இணைந்து உருவாகும் எழுத்துகள், உயிர்மெய் நெடில் என்றழைக்கப்படுகின்றது. மொத்தம் ( 18 மெய் x 7 உயிர் நெடில்கள் ) 126 உயிர்மெய் நெடில்எழுத்துகள் உள்ளன.
உதாரணம்
- க் + ஆ = கா
2. ஆய்த எழுத்து (ஃ)
மூன்று புள்ளிகளுடைய எழுத்தை நாம் ஆய்த எழுத்து என்கிறோம். ஆய்தம் என்றல் நுணுக்கம் என்று பொருள், எனவே நுண்ணிய ஒலியுடைய எழுத்து என்று பொருள்படும். தன்னளவில் குருகாத ஆய்தத்திற்கு ஒலி அளவு அரைமாத்திரையாகும்.
ஆய்த எழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். இவ்வாறு தனித்து வரும் ஆற்றல் இல்லாததினால் இது சார்பெழுத்தாயிற்று.
ஆய்த எழுத்து 3 புள்ளிகளைப் பெற்றிருப்பதால் இது முப்பாற்புள்ளி, முப்புள்ளி எனவும் அழைக்கப்படுகிறது.
உதாரணம்
- அ ஃ து – ‘அ’ குறில். ‘து’ வல்லின உயிர்மெய்
- இ ஃ து – ‘இ’ குறில். ‘து’ வல்லின உயிர்மெய்
- எ ஃ கு – ‘எ’ குறில். ‘கு’ வல்லின உயிர்மெய்
அளபெடை
அளபு என்றால் அளவு என்று பொருள் , எடுத்தல் என்பதற்கு நீண்டு ஒலித்தல் என்று பொருள் படும். குறில் எழுத்துகள் நீண்டால் நெடில்; நெடில் எழுத்துகள் நீண்டால் அளபெடை. செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை, அளபெடுத்தல் என்று கூறுவர். அளபெடை இரண்டு வகைப்படும். அவை,
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
என்பவை ஆகும்
3. உயிரளபெடை
உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பது உயிரளபெடை ஆகும். இவ்வாறு அளபெடுத்ததை வரிவடிவில் காட்டுவதற்கு அந்தந்த நெடிலின் இனக்குறிலாக குறில் எழுதப்பெறும்.
உதாரணம் : ஆ என்னும் நெடில் அளபெடுத்தால் அ என்னும் குறில் அதன் பக்கத்தில் எழுதப்பெறும் .(எ.கா) ஆஆரும்.
மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.
- ஓஒதல் வேண்டும் – முதல்
- கெடுப்பதூஉம் கெட்டார்க்கு – இடை
- நல்ல படாஅ பறை – கடை
உயிரளபெடையின் வகைகள்:
3.1 செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை )
3.2 இன்னிசை அளபெடை
3.3 சொல்லிசை அளபெடை
3.1 செய்யுளிசை அளபெடை
செய்யுளில் சில சமயங்களில் சில சீர்கள் அசை குறைந்து நிற்கும். ஓரசை ஈரசையாகவோ, ஈரசை மூவசையாகவோ வந்தால் தான் யாப்பு ஒழுங்கு இருக்கும். அவ்வாறு ஓசையை கூட்டுவதற்கு நெடிலெழுத்து தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து மூன்று மாத்திரை நீண்டு ஒலிக்கும் , நெடில் எழுத்துகளில் ஒளகாரத்தைத் தவிர்த்த ஆறு (ஆ , ஈ ,ஊ ,ஏ ,ஐ ,ஓ ) எழுத்துகளும் சொல்லின் முதல்,இடை,கடை ஆகிய மூன்று இடங்களிலும் அளபெடுக்கும் . ஒளகாரம் சொல்லின் முதலில் மட்டும் வரும். செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்
அளபெடைச் சொற்களைச் சொல்லும் போது, நெடில் எழுத்தைத் தனியாகவும் அதனோடு ஒட்டி வரும் குறில் எழுத்தைத் தனியாகவும் ஒலிக்கக் கூடாது. இரண்டு எழுத்துகளின் ஓசையும் ஒட்டி வரும்படியே நீட்டி ஒலிக்க வேண்டும். அளபெடையில் எழுத்துகளை விட்டு இசைப்பது ஓசை இனிமையைக் கெடுக்கும்.
(எ.கா) ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
3.2 இன்னிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி, அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.
(எ.கா) கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கெடுப்பதும் என்ற சொல்லில் உள்ள ‘து’ என்ற குறில்எழுத்து, ‘தூ’ என நெடில் எழுத்தாகி, கெடுப்பதூஉம் என அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.
4. ஒற்றளபெடை
உயிர் எழுத்துகள் அளபெடுப்பது போலவே மெய் எழுத்துகளும் அளபெடுக்கும். மெய் எழுத்து அளபெடுக்கும்போது, அதற்கு அடையாளமாக, அதே மெய் எழுத்து எழுதப்படும். ங், ஞ். ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்து மெய் எழுத்துகளும், ஆய்த எழுத்தும் அளபெடுக்கும். ஒரு மெய் எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும் என்று கூறப்பட்டது. மெய் எழுத்து அளபெடுக்கும்போது இரண்டு மெய் எழுத்துகள் வருவதால், இரண்டும் சேர்ந்து ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும்.
(எ.கா) இலங்ங்கு வெண்பிறைசூடு ஈசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமில்லை காண்.
5. குற்றியலுகரம்
உகரம் ஒரு மாத்திரை உடையது. இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து (குறுகி) ஒலிக்கிற இடங்களும் உண்டு. அப்போது அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) என்று அழைக்கப்படும். அதற்குச் சில வரையறைகள் உண்டு.
வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.
- இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும். (எ.கா): பாக்கு, பேசு, நாடு, காது, அம்பு, ஆறு.
- தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது. (எ.கா): அது, பசு, வடு, அறு முதலியவை.
குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை,
நெடில் தொடர்க் குற்றியலுகரம் – தனியாக உள்ள நெடில் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா): பாகு
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் – ஆய்த எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு ,து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா): அஃது (அது என்பது பொருள்)
உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் – உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
(எ.கா): வரகு
வன்தொடர்க் குற்றியலுகரம் – வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா): பாக்கு
மென்தொடர்க் குற்றியலுகரம் – மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா): சங்கு
இடைத்தொடர்க் குற்றியலுகரம் – இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா): மூழ்கு
6. குற்றியலிகரம்
குற்றெழுத்து ஒரு மாத்திரை பெறும் என்பது இலக்கணம். குற்றெழுத்துக்களில் ஒன்றான ‘இ’ என்னும் உயிர் சில இடங்களில் தமக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிக்கும்.இதனைக் குற்றியலிகரம் என்பர் . குற்றியலிகரம் இரண்டு வகையாக வரும்.
- தனிமொழிக் குற்றியலிகரம்
- புணர்மொழிக் குற்றியலிகரம்
குறுக்கங்கள்
குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகிய இரண்டிலும் உகரம் குறுகி ஒலிப்பதைப் பற்றிப் படித்தோம். அதைப்போல, ஐ, ஔ, ம், ஆய்தம் ஆகியவையும் குறுகி ஒலிக்கும். இவற்றை ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் என்று சொல்கிறோம்.
7. ஐகாரக்குறுக்கம்
‘ஐ’ என்கிற உயிர் எழுத்து சொல்லின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் வரும்.
(எ.கா)
- ஐப்பசி, வைகல் -முதல்
- கடைசி,இறைவன் -இடை
- மழை, நகை , கடை – இறுதி
மேலே ‘ஐ’ என்ற எழுத்து, சொல்லின் மூன்று இடங்களிலும் வந்திருப்பதைக் காணலாம். ‘ஐ’ என்பது நெடில் எழுத்து என்று முன்பே கூறப்பட்டது. நெடில் எழுத்து என்பதால் ஐகாரம் இரண்டு மாத்திரை நேரம் ஒலிக்கும். தனியே இருக்கும் ஐகாரம் மட்டுமே இவ்வாறு இரண்டு மாத்திரை ஒலிக்கும். ஐகாரம், சொல்லுக்கு முதலில் வந்து ஒன்றரை மாத்திரையாகக் குறைந்தது . இடையிலும் இறுதியிலும் வரும் ஐகாரம் இரண்டு மாத்திரையில் குறைந்து ஒரு மாத்திரையாக ஒலிக்கும். இதை ஐகாரக் குறுக்கம் என்று கூறுவர்
8. ஒளகாரக்குறுக்கம்
ஒளகாரம் நெடில் எழுத்து என்பதால் இரண்டு மாத்திரை பெறும். ஒளகாரம் தனியே ஒலிக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை.
ஒளகாரம் சொல்லுக்கு முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதை ஒளகாரக்குறுக்கம் என்பர். சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம் ஒன்றரை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்.
சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் ஒளகாரம் வாராது.
(எ.கா): ஒளவையார், மௌவல், வௌவால்.
9. மகரக்குறுக்கம்
மகரக்குறுக்கம் என்பது மகர ஒற்று, குறைந்து ஒலிப்பதைக் குறிக்கும். . “ம்” என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும். மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்
மகரக்குறுக்கம் இரண்டு வகைப்படும்
தனிமொழி – ணகர, னகர ஒற்று எழுத்துகளை அடுத்து வரும் மகரமெய் எழுத்து, குறைந்து ஒலிக்கும்.
(எ.கா): மருண்ம்
புணர்மொழி – இரண்டு சொற்கள் சேரும்போது, முதல் சொல்லின் இறுதியில் மகர ஒற்று வந்து, இரண்டாம் சொல்லின் முதல் எழுத்தாக வகரம் வந்தால் மகர ஒற்று குறுகும்.
(எ.கா): வாழும் வகை, பழம் விழுந்தது
10. ஆய்தக்குறுக்கம்
இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் இறுதியில் ல், ள் ஆகிய மெய் எழுத்துகள் வந்து இரண்டாம் சொல்லின் முதலில் தகர எழுத்து வந்தால் ல், ள் ஆகியவை ஆய்த எழுத்தாக மாறிவிடும்.
(எ.கா)
- அல்+திணை=அஃறிணை
- முள்+தீது=முஃடீது
இந்த ஆய்த எழுத்து, குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும். இதையே ஆய்தக்குறுக்கம் என்று கூறுவர்.
Related Tags
#உயிர் எழுத்துகள், #குறில், #நெடில், #மெய்யெழுத்துகள், #மாத்திரை, #அசை, #சீர், #யாப்பு

