எழுத்தின் பிற வகைகள்
சுட்டு எழுத்துகள்
ஒன்றைச் சுட்டிக் காட்டவரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்
(எ. கா) அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த
வினா எழுத்துகள்
வினாப் பொருளைத் தரும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.
எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
- மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு)
- மொழியின் இறுதியில் வருபவை – ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ )
- மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை – ஏ (ஏன், நீதானே)
வினா எழுத்துகள் இரு வகைப்படும்.
- அகவினா
- புறவினா
இன எழுத்துகள்
சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும். ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின மெய் எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
(எ.கா)
- ங் – க் -> சங்கம்
- ஞ் – ச் -> மஞ்சள்
- ண் – ட் -> பண்டம்
- ந் – த் -> சொந்தம்
- ம் – ப் -> கொம்பு
- ன் – ற் -> தென்றல்
மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும். குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும். ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும். சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
(எ. கா) ஓஒதல், தூஉம், தழீஇ
தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.
மயங்கொலிகள்
உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே இருப்பினும் அவற்றிக்கிடையே பொருள் வேறுபாடு உண்டு.
- (ண, ன, ந)
- (ல, ழ, ள)
- (ர, ற)
இந்த எழுத்துகளில் ‘ந’கரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும். ‘ற’கர மெய் சொல்லின் இறுதியில் வராது. மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்.
Related Tags
#