திணை

      திணை என்றால் ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள். இங்கே இனம் என்ற பொருளில்  இச்சொல் இடம்பெறுகிறது.  திணை இரண்டு வகைப்படும். அவை 1. உயர்திணை 2. அஃறிணை.

  1. உயர்திணை -> ஆறு அறிவுடைய மனிதர்களை உயர்திணை என்பர்.
  2. அஃறிணை -> பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருள்களை அஃறிணை என்பர்.

திணைப் பொதுப்பெயர்

      உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வரும் பெயர் திணைப் பொதுப்பெயர் எனப்படும்.

  • தாய், தந்தை என்னும் முறைப்பெயர்களும், தன்மை, முன்னிலை இடப்பெயர்களும், தான், தாம் ஆகிய படர்க்கை இடப்பெயர்களும், மூவிடத்துக்கும் பொதுவான ‘எல்லாம்’ எனும்பெயரும் இருதிணைகளுக்கும் பொதுவாய் வருவன ஆகும்.

(எ. கா) தாய் இவள், தாய் இப்பசு 

  • தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய வரும் (எ. கா.) அவன் தான் ,அது தான் ,அவர் தாம் ,அவை தாம்

      பால் ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியனவாகும்.

உயர்திணையில்

     1. ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால். (Masculine – Singular)

(எ.கா) மாணவன், செல்வன்.

     2. ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால். (Feminine – Singular)

(எ.கா) ஆதினி, மாணவி.

    3.  ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால். (Plural)

(எ.கா) மாணவர்கள், மக்கள்.

அஃறிணையில்,

     4. ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால். (Singular)

(எ.கா) கல், பசு.

     5. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால். (Plural)

(எ.கா) மண் புழுக்கள், பசுக்கள்.

#